ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Sunday 29 April 2018

பிரசங்கக் குறிப்புகள் - பழைய மாவு

புதிதாக சுதந்திர சபை (Independent Church) தொடங்கிய ஒரு பாஸ்டர், தன் சபையில் நன்கு கம்ப்யூட்டர் தெரிந்திருந்த தன் சபை உறுப்பினரின் மகனிடம் ஒரு சனிக்கிழமை அன்று உதவி கேட்டுச் சென்றார்.
பாஸ்டர் முருகன் “தம்பி உங்களுக்கு இந்த இண்டர்நெட்ல பைபிள் குறிப்பு எடுக்கிறது எல்லாம் தெரியுமா?”
”ஓ! தெரியுமே உங்களுக்கு எந்த வேதபகுதிக்கு குறிப்பு வேணும்னு சொல்லுங்க எடுத்துத் தரேன்” என்றான் டாம்
“எந்த மாதிரி தலைப்புக்கு எல்லாம் நீங்க பிரசங்க குறிப்பு எடுத்துத் தருவீங்க?”
“பாஸ்டர், பிரசங்க குறிப்பு எல்லாம் நான் சின்ன வயசுல இருந்து கேக்குற அதே வழக்கமான குறிப்புகள் தான் , இதோ கேளுங்க!” என்று பட்டியலிட்டான்
1. அன்பு - கிறிஸ்துவின் அன்பு, இதன் மூலம் அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் இரட்சிக்கப்பட்டனர்
2. நீதி - அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அழிக்கப்படுவார்கள்
3. ஆசீர்வாதம் - அவரை ஏற்றுக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
4. காணிக்கை, தசமபாகம் - இதை கொடுத்தால் தான் பொருளாதார ஆசீர்வாதம் கிடைக்கும்
5.சோதனை - இவ்வுலக ஆசீர்வாதம் வெறும் மாயை, கர்த்தர் அவர் விரும்புகிறவரை சோதிக்கிறார்
6. மன்னிப்பு - நாம் நமக்கு விரோதமாக இருக்கும் அனைவரையும் மன்னிக்க வேண்டும்
7. உயர்த்துவார் - உங்கள் எதிரிகள் முன்பாக உங்களை உயர்த்துவார், அவர்கள் வெட்கப்பட்டுப்போவார்கள்
8. கட்டளை - நீங்கள் இரட்சிக்கப்பட்டாலும் இதை கைக்கொண்டால்தான் பரலோகம் செல்வீர்கள்
9. பாவம் - நாம் அனைவருமே கட்டளைகளை கைக்கொள்ளாமல் பாவம் செய்தோம்

வேற எதுனா விட்டுப்போச்சா?
“அடேயப்பா! எனக்குத் தெர்ஞ்சு எதுவும் விட்டுப்போகல, ஆனா நீங்க சொல்ற பட்டியல்களும் அதுக்கும் நீங்க கொடுக்கிற விளக்கங்களும் ரொம்ப முரண்பாடா குழப்பத்த ஏற்படுத்துற மாதிரி இருக்கே தம்பி!”
”நானா கொழப்புறேன் பாஸ்டர், பல வருஷமா சர்ச்ல இப்டி தான கொழப்பிகிட்டு இருக்காங்க, புதிய ஏற்பாட்டுல ஒரு வசனத்த எடுத்து “மன்னிப்பு” பத்தி பிரசங்கம் பண்ண வேண்டியது, அடுத்ததா பழைய ஏற்பாட்டுல ஒரு வசனத்தை எடுத்து “உன் எதிரிக்கு முன் நீ உயருவாய்”னு சொல்ல வேண்டியது, நாம எல்லாரையும் மன்னிச்சிட்டா, அப்புறம் ஏது எதிரி?”
“தம்பிய யாரோ குழப்பி இருக்காங்க!”
“நீங்க தான் தெளிவா இருக்கீங்களே பாஸ்டர்! நீங்க தெளிவுபடுத்துங்க”
”அது வந்து தம்பி, பைபிள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்”
“அதாவது, அப்டியும் சொல்வோம், இப்டியும் சொல்வோம்னு சொல்றீங்களா?”
“அப்டி இல்ல தம்பி, கர்த்தர கேள்வி கேட்க நாம யாரு?”
”அச்சச்சோ! நான் கடவுள எல்லாம் கேள்வி கேட்கலையே பாஸ்டர், உங்கள்ட்ட தான் கேள்வி கேட்குறேன்”
“நீ நல்லா பைபிள் படிச்சு ப்ரேயர் பண்ணு தம்பி, கர்த்தர் உனக்கு புத்தி தெளிவை கொடுப்பார்”
“அப்புறம் எதுக்கு பாஸ்டர் நீங்க பிரவுசிங் செண்டருக்கு அலைஞ்சு திரிஞ்சு பிரசங்க குறிப்பு எடுக்குறீங்க, கர்த்தர் கிட்டயே கேட்க வேண்டியது தானே”
“நீ ரெகுலரா சர்ச்சுக்கு வர்றதில்லையாப்பா?”
“பைபிள் படிச்சு ப்ரேயர் பண்ணா கர்த்தர் பேசுவாரே, அப்புறம் எதுக்கு பாஸ்டர் சர்ச்சுக்கு வரனும்”
“ஒரு ஐக்கியத்துக்கு தான் தம்பி”
“ஐக்கியம் சரி, அதுக்காக நீங்க பேசுறத எதுக்கு நான் 2 மணி நேரம் உட்கார்ந்து கேட்கனும்”
“அது கர்த்தரோட வார்த்த தம்பி”
“உங்க கர்த்தரோட வார்த்தை என்னோட கம்ப்யூட்டர்க்குள்ள இருக்கு, சந்தேகம் ஏதாவதுன்னா பரிசுத்த ஆவியானவர் உள்ள இருந்தே க்ளீயர் பண்ணீருவார்னு சொன்னீங்களே!”
“சரி தம்பி, நான் வர்றேன், கர்த்தர் உன் கூட இடைப்படுவார்”
“நன்றி பாஸ்டர், நீங்க கேட்ட பிரசங்க குறிப்புகள் பிரிண்ட் அவுட் எடுத்துட்டேன் 15 ரூபா கொடுங்க!”

No comments:

Post a Comment