ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Saturday 19 July 2014

செல்லத்தங்கம் !

”சனியனே, இந்த தடவையும் கணக்கு பாடத்துல கோட்ட விட்டுடியா? அந்த 2 மார்க் வாங்கித் தொலைஞ்சா தான் என்ன? எப்ப பாத்தாலும் 98 மார்க், அடிப்பாவி அறிவியல்ல என்ன டி ஆச்சி வெறும் 95, இப்டியே போனா நீ பிச்ச தான் எடுக்கணும் பாப்பு !” என்று சலித்துக்கொண்டே தன் மகளை திட்டி தீர்த்தார் சீதா.
“கொழந்தைய அ
ப்படி எல்லாம் திட்டாதீங்க ! பாவம் பரீட்ச நேரத்துல பயத்துல ஏதாவது தப்பு பண்ணி இருப்பா !”, என்று அவருக்கு ஆறுதல் கூறினார் புதிதாக அந்த காலனிக்கு குடித்தனம் வந்திருந்த கோமதி.
”உங்களுக்கு என்ன? உங்க புருஷன் மேனேஜரா இருக்கிறார், உங்களுக்கு பணக்கஷ்டம்னா என்னன்னே தெரியாது, என் புருஷன் வெறும் கிளார்க் தானே ! எங்கள மாதிரி மிடில் கிளாசுக்கு தான் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் !” என்று புலம்பித் தள்ளினார் சீதா.
“ம்ம், சரி ! இன்னக்கி எங்க வீட்ல என் பாப்புசெல்லத்துக்கு பிறந்தநாள் விழா ! சாயங்காலம் 6 மணிக்கு வந்திடுங்க !”
“ஓ, சாரி இந்த சனியன் பண்ண பிரச்சனைல நான் பாட்டுக்கு டென்ஷனாகி ஏதேதோ பேசிட்டேன், சாயங்காலம் கண்டிப்பா வந்திடுவேன் !” என்றார் சீதா.
சாயங்காலம்...
”அடியே பாப்பு, சனியனே, சீக்கிரம் புறப்படு, மேனேஜர் வீட்ல எல்லாரும் வந்திருப்பாங்க, 7 கழுத வயசாகுது இன்னமும் உனக்கு சடபிண்ணிக்க கூட் நான் தான் வரணும், நீ எல்லாம் என்னக்கி படிச்சி, முன்னேறி என்னைய காப்பாத்த போற ! சனியனே, சனியனே !” என்று திட்டிக்கொண்டே பாப்புவை புறப்பட வைத்து மேனேஜர் மனைவி கோமதியின் வீட்டிற்கு வந்து அடைந்தார்கள்.
புதிதாக வந்தவர்கள் என்பதால் வீட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. வீடு முழுவதும் பலூன், ரிப்பன் போன்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோமதியின் குழந்தை பாப்புசெல்லம் கேக் முன்பாக அமர்ந்து இருந்தாள். அவளுக்கு வயது 10 இருக்கும்.
“கேக்க வெட்டு செல்லம் !” என்று கூறிக்கொண்டே பாப்புவின் கையை பிடித்து கேக்கை வெட்டினார் கோமதி.  ஒரு பக்கம் கோணலான வாயுடன், வாயில் ஜொல்லு ஒழுக, விநோதமான சிரிப்புடன் கேக்கை வெட்டினாள் பாப்புசெல்லம்.
இதை பார்த்துக்கொண்டு இருந்த சீதாவுக்கு கண்கள் திடீரென குபுக் என நீரை வெளியேற்றின. தனியாக வெளியே சென்று அழுதுவிட்டு பின்பு மீண்டும் வீட்டிற்குள் வந்தார் சீதா.
எல்லோரும் சென்ற பிறகு கோமதியிடம் அமைதியாக நின்றார் சீதா, “எப்படி?...” என்று கேட்டு முடிப்பதற்குள் கோமதி தொடர்ந்து பேசினார்.
“பாப்பு செல்லத்துக்கு டவுன் சின்ட்ரோம், குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே இவள அபாஷன் பண்ணிட சொல்லி நெறைய பேர் சொன்னாங்க ! ஆனா  நாங்க ஒரு உயிர கொல்லக்கூடாதுன்னு விட்டுட்டோம் !”
“இது சரியாகவே ஆகாதா?” கரிசனையுடன் கேட்டார் சீதா.
“நல்ல பயிற்சியாளர் வெச்சி பயிற்சி கொடுத்தா, தானா டாய்லெட் போகவும், தனக்காக சின்ன சின்ன வேலைகள் செய்யவும் கத்துக்கலாம், அதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாது !”
“நானா இருந்தா கருவிலயே களைச்சி இருப்பேன் !”
“இவ கடவுளோட மகிமையை சொல்றதுக்காக பிறந்த குழந்த, இவள எப்படி கொல்றது”
“என்னது கடவுளோட மகிமையா?”
“நமக்கு லாபம் இல்லனு தெரிஞ்சாலும் ஒரு உயிர் மேல நாம காட்டுற அன்பு தான் உண்மையான அன்பு, தன்னோட மகன் சாகப்போறாருன்னு தெரிஞ்சே நமக்காக கடவுள் தன் மகனை தியாக பலியா கொடுத்து இருக்கிறாரு, அவர வணங்குற நாங்க இப்படி ஒரு உயிரை கொல்லலாமா? இந்த உயிர எங்கள நம்பி கடவுள் கொடுத்து இருக்கிறார், என் உயிர் இருக்கிறவரைக்கும் நான் என் பாப்புசெல்லத்த அன்பா பாத்துக்குவேன் !”
- சாம் 7

Thursday 17 July 2014

நல்லதல்ல

பாலன் வீட்டில் கணிப்பொறியை நோண்டிக்கொண்டு இருந்தான். அப்போது யாரோ வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது வீட்டு வாசலில் அஷோக் வந்து நின்றான்.
“வா மச்சி, உள்ள வா ! என்ன திடீர்னு இந்த பக்கம்?”
”ஒன்னும் இல்லடா, சும்மா போர் அடிச்சிது அதான் கடைத்தெருவுக்கு உன் கூட போகலாம்னு வந்தேன் !”
”அப்டியா, ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன் !!”
இருவரும் புறப்பட்டு வெளியே நடந்து சென்றார்கள். அப்போது, அஷோக் பேச்சை தொடங்கினான்.
“அப்புறம் மச்சி, எவ்ளோ நாள் தான் நீயும் நானும் சேந்து நடக்குறது?”
“ரெண்டு பேருக்கும் காலும், நடக்குறதுக்கு ரோடும் இருக்கிற வரைக்கும்!”
“டேய், அத கேக்கல டா ! உன் கல்யாணம் எப்ப?”
“உனக்கு தெரியாததா மச்சி ! எனக்கு தான் சின்ன வயசுல இருந்தே கல்யாணம்னா பிடிக்காதுல்ல !”
“மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்லனு பைலில்ல இருக்குல்ல !”
“அப்டியா? சரி உன் கல்யாணம் எப்ப?”
“எங்க மச்சி, ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது !”
”மேட்ரிமோனி வெப்சைட்ல பதிவு பண்ணி வெச்சிருந்தியே, என்னாச்சு?”
“பாத்துகிட்டே இருக்கேன், ஒன்னும் வேலைக்கு ஆகல !”
“ஏன் டா மொதல்ல ஏதோ ஒரு பொண்ணு பாத்ததா சொன்னியே !”
“அந்த பொண்ணா? அது வட மாநிலத்தில ஊழியம் பண்ணனுமாம், எனக்கு கர்த்தர் அந்த பாரத்த கொடுக்கல, உள்ளூர்லயே வாலிபர்கள் ஊழியம் செய்யனும்ங்கிறது தான் என்னோட வாஞ்ச”
”சரி, அடுத்ததா ஒரு பீஈ படிச்ச பொண்ணு ஒன்னு பாத்தியே !”
“மாசம் 1 லட்சம் ரூபா சம்பாதிக்கனுமாம், நம்ம 20 ஆயிரம் ரூபா சம்பாதிக்கிறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது!”
“அடுத்ததா ஏதோ பாஸ்டர் பொண்ணு ஒன்னு பாத்தியே !”
“அந்நிய பாஷைல பேசணுமாம், எனக்கு கர்த்தர் அந்த வரத்த கொடுக்கலையே, நான் என்ன பண்றது !”
“சரி, அப்பா அம்மா வேற எந்த பொண்ணையும் தேடலையா?”
“தேடுனாங்க, போற எடத்துல எல்லாம், பையனுக்கு ஒரு ஆபீஸ் வெச்சி தாங்க, பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கா, அப்டி இப்டினு கேட்டாங்க !, இதேல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு, நீங்க ஒன்னும் பாக்க வேண்டாம்னு சொல்லிட்டேன் !”
“சரி, லவ் பண்ணியாவது பாரேன், அதுக்கும் முயற்சி பண்ணேன் !”
“பார்றா? அப்புறம் அஷோக்கு பெரிய ஆளு டா, என்னா சொல்லுது உன் ஆளு?”
“என்னைய பிடிக்கலைனு சொல்லுது !”
“என்னடா சொல்ற, என்னாச்சி?”
“6 மாசமா மச்சி, அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு? கேட்டு ஒவ்வொரு விஷயமா நான் மாத்திகிட்டேன், அவங்க அப்பா கிட்ட கேட்டா, அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்”
“அவருக்கு பிடிக்கலைனா என்ன? பொண்ணு உறுதியா இருந்தா சொல்லு, நான் முடிச்சி வெக்கிறேன்!”
“இல்ல மச்சி, உண்மையில பொண்ணுக்கு தான் என்னைய பிடிக்கல, அத முன்னாடியே சொல்லி இருந்தா, நான் டீசண்டா கங்க்ராஜுலேஷன் சொல்லிட்டு வந்திருப்பேன், ஆனா நான் அனுப்புன மெய்ல், மெசேஜ் எதுக்குமே ரிப்ளை பண்ணாம இருந்ததால, கடுப்புல திட்டினேன், உண்மையில அவளுக்கு தான் என்னைய பிடிக்கலைனு சொன்னா!”
“சரி விடு மச்சி, இவ இல்லைனா இன்னொரு பொண்ணு”
“வருத்தம் எல்லாம் ஒன்னும் இல்ல, மொதல்லயே நேரா சொல்லி இருந்தா இவ்ளோ முயற்சி எடுத்திருக்க வேண்டாம், குறைந்தபட்சமா நண்பர்களாவாவது பிரிஞ்சிருக்கலாம், இப்ப பாரு, எதிரி மாதிரி சண்ட போட வேண்டியதா போச்சு !”
“விடு மச்சி, பொண்ணுங்க மனசு ரொம்ப ஆழம், அதுல என்ன இருக்குதுன்னு ஒன்னுமே புரியாது !”
இவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, ஏதோ பாஸ்டர் ஜஸ்டின் வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது.
இருவரும் அந்த வீட்டின் அருகே சென்றார்கள், பாஸ்டர் ஜஸ்டினும் அவருடைய மனைவியும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு ஒரே ரகலை, ஊரே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
“நல்ல வேல, கல்யாணத்துக்கு முன்னாடி பிடிக்கலைனு சொன்னா !”
“மச்சி, நீ எனக்கு ஒரு வசனம் சொன்னல்ல, நான் ஒன்னு சொல்றேன், கல்யாணத்துக்கு ரொம்ப முக்கியம் அன்பு, அது இல்லைனா, கல்யாணமே தேவை இல்ல ! கல்யாணம் பண்ணிக்கோனு அட்வைஸ் பண்றவங்க எத்தன பேர் சமாதானமா வாழ்றாங்கனு பாரு, சமாதானமா வாழ முடியாதவங்க அட்வைச எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல !”
“அப்டினா பைபில் வசனம் தப்புனு சொல்றியா?”
“அடடே ! இல்ல மச்சி , சரி நானும் ஒரு வசனம் சொல்றேன், சண்டைக்காரியோடே தங்குவதை பார்க்கிலும், வீட்டில் ஒரு மூலையில் தங்குவதே நலம் !”

- சாம் 7

Monday 30 June 2014

3 + 5

நான் பாப்பு ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே கடவுள் நம்பிக்க இல்லாதவங்க தானுங்க. ஆனா பாப்பு தங்கம் இந்த இயேசு கடவுள வணங்க ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் நானும் சொல்லி பாத்தேனுங்க. அப்புறம் நேத்து ராத்திரி ரொம்ப கடுப்பாகி ஒரு அப்பு அப்பிட்டேனுங்க. அதுல அவ கண்ணத்துல பாத்தீங்கன்னா மூணு விரல் பதிஞ்சி போச்சுங்க !
இன்னிக்கி காலைல பாருங்க, ஏதோ ஒரு பேப்பர கையில வெச்சிகிட்டு, வாய்ல என்னமோ மொனகிக்கிட்டு இருந்தாலுங்க. அவ ஏடிஎம்ல பணம் எடுக்க கிளம்பின உடனே நான் அந்த பேப்பர்ல என்ன தான் எழுதி இருக்குதுன்னு பாக்கலாம்னு பாத்தேனுங்க. அவ எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ப கடந்து போறத ஜன்னல்ல பாத்துட்டு, ஒடனே திரும்பி வந்து என்ன தான் அந்த பேப்பர்ல இருக்குன்னு பாக்க வந்தேனுங்க.

பாத்தா, எங்க பக்கத்து வீட்டுக்காரங்க, எதித்த வீட்டுக்காரங்க, காய்கறி விக்கிற பொம்பளன்னு, தெரிஞ்சவங்க எல்லாரோட பேரும், அவங்களோட தேவைகளும் இருந்துச்சிங்க. இத பாத்து எதுக்கு மொனகிக்குட்டு கண்ணீர் விட்டானு தெரிலைங்க. சரின்னு டிவி பாக்க ஆரம்பிச்சா, நேத்து எவனோ ஒருத்தன் ஏடிஎம் உள்ள பணம் எடுக்க போன பொம்பளய கத்திய காட்டி பணம் புடுங்கிட்டு, அவளையும் வெட்டிபோட்டுட்டு வர்றத காட்டுனாங்கங்க ! எனக்கு பகீர்னு இருந்துச்சிங்க !
பாப்பு பஸ் ஸ்டாப்ப கடந்து போனப்ப அவன மாதிரி யாரையோ பாத்த ஒரு நியாபம் வந்துச்சிங்க, உடனே நான் பைக்க எடுத்துகிட்டு ஏடிஎம் கிட்ட போய்டேனுங்க !
நான் நெனச்ச மாதிரியே ஏடிஎம் சட்டர் மூடுறத பாத்தேனுங்க ! வேகமா போய் அந்த சட்டர தூக்கி விட்டுட்டு பாத்தேனுங்க !
ஆத்தாடி ஆத்தா ! அந்த திருட்டுப்பய ஒரு
பக்கம் விழுந்து கிடந்தான், அவன் கத்தி ஒரு பக்கம் கெடந்துச்சி, உடனே அத எடுத்து அவன மிரட்டி கட்டிபோட்டுட்டு, போலீச வரவழைச்சிட்டோம் !
அன்னக்கிலேருந்து என் பாப்புவ, நான் வாடி போடின்னு கூட கூப்புடுறது இல்லிங்க, வாங்க போங்கனு தாங்க கூப்புடுறேன் !
ஏங்க ஒரு மொரட்டு திருடன் கண்ணத்திலயே அஞ்சி விரலும் பதியிறமாதிரி அடிச்சிருந்தா ! நான் என்னத்துக்குங்க ஆவேன்.....

- சாம் 7 

Sunday 16 March 2014

இங்க இல்லையே

அன்புச்செல்வியின் வீட்டிற்கு திருமண கலை வந்துவிட்டது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப கராரானவர்கள்.
ஏற்கனவே அவர்கள் கேட்ட ரொக்க பணம் ஐந்து லட்சம் ரூபாய்க்காக வீட்டை விற்றுவிட்டார் அன்புச்செல்வியின் தந்தை கண்ணன்.
“இன்னும் இவங்க என்னவெல்லாம் கேட்கப் போறாங்களோ? வீட்டை வித்தாச்சு, ஏற்கனவே சேத்துவெச்ச 20 பவுன் நகையும் போதாது, அவங்க 50 பவுன் கேக்கறாங்க” தன்னுடைய கண்ணாடியை கலற்றி வைத்துவிட்டு யோசித்தார் கண்ணன்.
“நம்ம பொண்ணுக்கு வேற வரனே கிடைக்காதா? நீங்க நல்லா விசாரிச்சீங்களா?” என்றார் கண்ணனின் மனைவி விசாலாட்சி.
“ஏற்கனவே நம்ம பொண்ணுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது, மாப்பிள்ளையும் நல்ல சாப்ட்வேர் நிறுவனத்தில பணிசெய்யறாரு, இனிமே மாப்பிள்ளை தேடி கிடைக்கலைனா ரொம்ப கஷ்டமா போயிடும்”
“நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க அப்பா, கல்யாணம் நல்லடியா முடியட்டும், அது அப்புறமா நான் அவங்க எல்லாரையும் ஒரு கை பாத்துக்குறேன் !” என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டிவிட்டு அன்புச்செல்வி கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றாள்.
அவசரத்தில் செல்போனை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டாள்.
அப்போது அன்புச்செல்வியின் சிநேகிதி அவளை செல்போனில் அழைத்தாள்.
அதை அவளுடைய அப்பா கண்ணன் எடுத்து “அன்பு இங்க இல்லையே !” என்றார்.
அவர் சொன்னது உண்மைதானே !

 - ஜெயசீலன் சாமுவேல்

Tuesday 25 February 2014

சிஸ்டர்


”சீக்கிரம் எந்திரி, நேரமாச்சி” என்று பியூலா என்னை எழுப்பிவிட்டாள். என் கண்கள் இரண்டிற்கும் இடையே கடுமையான இரும்புக்கம்பிகளை வைத்து கட்டியதைப் போல இருந்தது. மெல்ல என் கண்களை திறந்தேன். மிளகாய் பொடி கண்ணில் போட்டது போல் ஒரு எரிச்சல். ”அதற்குள் என்ன அவசரம், இப்போது தான் பாதி தூக்கம் முடிந்திருக்கிறது” என்பது போல என் தலைக்குள் ஒருவகையான உணர்வு. எப்படியோ தட்டுத் தடுமாறி நான் எழுந்து, குளித்துவிட்டு புறப்பட்டேன். என் கை பையில் சீருடையை எடுத்துக்கொண்டு, நான் தங்கி இருந்த விடுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றேன்.

அங்கே இருந்த என் தோழி ஷ்யாமலா வார்டில் இருக்கும் நோயாளிகளை பற்றி என்னிடம் கூறினாள். “நல்ல வேல வந்திட்ட, நல்லா கவனிச்சிக்கோ, இந்த வார்டுல முதல் படுக்கையில ஜான் செல்வராஜ்னு ஒருத்தர் இருக்காரு, சரியான காயம், இப்ப ஓரளவுக்கு சரியாகிரிச்சி, ஆனா எப்ப பாத்தாலும் பாட்டு பாடுறேன்னு பக்கத்தில படுத்து இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காரு”

நடுத்தர வயதை அடைந்திருந்த ஒரு நபர் அந்த படுக்கையில் இருந்தார்.

“இரண்டாவது படுக்கையில் ஒரு சிறுவன், பேரு வினோத். நேத்து பள்ளிக்கூடத்தில விளையாடும்போது, கால் தடுக்கி கீழ விழுந்ததுல முழங்கால்ல காயம். எழுந்ததும் இந்த மருந்த கொடுத்திரு” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

மணி 10 ஆனது. மருத்துவமனையில் அமைதி நிலவியது. நோயாளிகள் இருந்த வார்டுக்கு அருகே உள்ள வரவேற்பு மேசையில் நான் அமர்ந்து இருந்தேன். அப்போது என் சிந்தனை பல இடங்களுக்கு அலைபாய்ந்துகொண்டு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்திற்கு என் மனம் சென்றது. பள்ளி முடிந்து நான் வெளியே வந்துகொண்டு இருந்தேன், அப்போது வெளியே ஒரு க்டையில் அனைவரும் தேன் முட்டாய் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் ஆவலாக தேன் முட்டாய் வாங்கலாம் என்று சென்ற போது நடுவில் இருந்த சாலையையும், அதில் வேகமாக வந்துகொண்டு இருந்த தேசிய அனுமதிபெற்ற லாரி வருவதையும் கவனிக்கவில்லை. நான் தூக்கி எறியப்பட்டேன். இறந்துவிட்டேன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள் ஆனால், இல்லை. இதே மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றேன். அப்போது வெள்ளை அங்கி அணிந்தவர் ஒருவர் என் அருகே வந்தார். அந்த சர்ச் மருத்துவமனையின் அருட்தந்தை (Father) தான் அவர். அவரும் அவரோடு இருந்தவர்களும் எனக்காக ஜெபித்தார்கள். எனக்கு ஏ1பி நெகடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டதால், இந்த மருத்துவமனையை கட்டிய தேவாலயத்தின் கல்லூரியில் இருந்து இரவோடு இரவாக 8 மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு ரத்தம் கொடுத்தார்கள். என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே

“ப்ராப்லம் சால்வ்டு, ப்ராப்லம் சால்வ்டு !
ப்ராப்லம் சால்வ்டு, மை ப்ராப்லம் சால்வ்டு !” என்று யாரோ ஒருவர் திடீரென்று பாடினார்.

நான் எழுந்து வேகமாக வார்டுக்கு சென்றேன், “ஜான் அண்ணே, கொஞ்சம் பேசாம இருங்க, மத்த நோயாளிகள் எல்லா தூங்குறாங்கல்ல !” என்றேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, “ஏன்ணா அழுறீங்க !” என்று நான் கேட்டேன். “இல்லம்மா, என் இளநிரைய பாத்து,இப்டி அண்ணேனு கூப்டுட்டியே, அதான் அழுறேன் !” என்றார். “சார், காமெடி பண்ணாம போய் தூங்குங்க சார். இப்ப தான் தெரியிது, உங்க பொண்டாட்டி ஏன் இப்டி சப்பாத்தி கட்டயால விரட்டி விரட்டி அடிச்சாங்கனு” பின்பு அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

மருத்துவமனை வாசலில் ஒரு ஆம்பூலன்ஸ் வேகமாக வந்து நின்றது. அவசர அவசரமாக ஒருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்தார்கள். நானும் கீழே சென்று என்ன ஆயிற்று என்று பார்த்தேன். ஒரு இளைஞன் உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருந்தார். நான் உடனடியாக ட்யூட்டி டாக்டருக்கு ஃபோன் செய்தேன். அந்த இளைஞனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றோம். அதிகமான இரத்த இழப்பு. ஏற்பட்டு இருந்தது. அவன் உடலில் வழிந்து வந்த இரத்தத்தை பஞ்சினால், தேய்த்து எடுத்தேன். மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்து. மயக்க மருந்து கொடுத்தார். இரவு நேரத்தில் குடிபோதையில் பைக்கை ஓட்டிச் சென்று புளியமரத்தின் மீது மோதி காயம் அடைந்திருந்தான். அவனும் எங்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவன் வினோத் திடீரென்று வலியால் கத்தினான். ”நான் அவன் அருகே சென்று அழுகாத வினோத் அக்கா இங்கதான இருக்கேன் !” என்று கூறி. அவனுடைய காயத்திற்கு மருந்து கொடுத்துவிட்டு. திரும்பவும் வரவேற்பு மேசைக்கு சென்றேன். மணி 2:30 தாண்டியபோது, தூக்கம் விழிகளையும், பசி வயிற்றையும் பிடித்து இழுத்தது. பக்கத்து அறையில் இருந்த சசியை சற்று பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, நான் மருத்துவமனை கேன்டீனுக்குச் சென்றேன்.

“அண்ணா ஒரு டீயும், பன்னும் குடுங்க !” என்றேன்
“வாம்மா இந்துமதி, நைட் ஷிஃப்ட் எல்லாம் எப்டி போகுது !”
“நல்லா போகுதுண்ணே !”
“நீங்க எப்டி ராத்ரி முழுக்க அடுப்பு பக்கத்திலயே இருக்கீங்க !”
”எல்லாம் பொலப்புக்காகத்தான், பழகிப்போச்சு மா !”
“நீங்க கிரேட் அண்ணா !” என்று கூறிவிட்டு வேகம் வேகமாக டீயையும், பன்னையும் சாப்பிட்டுவிட்டு என் வார்டுக்குச் சென்றேன்.

மணி ஐந்தை நெருங்கியது. கண்ணில் மீண்டும் அதிகமான எரிச்சல். சற்று நேரத்தில் நோயாளிகளை பார்க்க அவர்களுடைய உறவினர்கள் வந்துவிடுவார்கள்.
திடீரென்று விபத்தில் காயமடைந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை நானும், இன்னும் இரண்டு கம்பவுண்டர்களும் சேர்ந்து, மீண்டுமாக அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றோம். இன்னும் 3 மணி நேரத்துக்குள்ள இவருக்கு அறுவைசிகிச்சை செய்யனும், அப்டியே செஞ்சாலும் பிழைக்கிறது கஷ்டம் தான் என்று மருத்துவர் கூறிவிட்டார். நோயாளியின் உறவினர்களுக்கு இதை நான் தொலைப்பேசியில் அழைத்து கூறினேன். என் மொபைலில் உள்ள முகப்புத்தகத்தில் “விபத்தில் காயமடைந்த ஒரு நோயாளி எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் அவருக்காக ஜெபிக்கவும்” என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துவிட்டு, மருத்துவமனை சேப்பலுக்கு சென்று விபத்தில் அடிபட்ட அந்த நபருக்காக, ஜெபிக்கத்தொடங்கினேன். ஊரில் இருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. “நாளைக்கு தீபாவளி, சீக்கிரமா வந்துடுடீ, என்ன வேலை எல்லாம் முடிஞ்சிருச்சில்ல” என்று அம்மாவின் குரல். “இப்ப தான் ட்யூட்டி முடிச்சிச்சு, இன்னும் கொஞ்ச நேரத்தில புறப்பட்டு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு, நான் சேப்பலில் இருந்து வெளியேறினேன்.

நான் சென்ற பிறகு, ஜான் அண்ணன் அருகே ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது, அதில் “தயவுசெஞ்சி பக்கத்தில இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணாம, பாட்டு எழுதுங்க, பாடாதீங்க” என்று எழுதி இருந்தது. வினோத் அருகில் ஒரு கால்பந்தாட்ட வீரர்களின் படம் உள்ள ஒரு விளையாட்டு கார்டை பார்த்தான்.

மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது. இரண்டு இளைஞர்கள் எதிர் திசையில் வந்தார்கள். “சிஸ்டர், செமயா இருக்குதுல்ல” என்றான் ஒருவன். “சிஸ்டர்னா தங்கச்சி டா லூசு” என்றான் இன்னொருவன்.
“நானே தூக்கமும் பசியும் தாங்கமுடியாம, போய்கிட்டு இருக்கேன், இதுல இவனுங்க வேற”

- கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

அவசரம் !


இரவு மணி 8. போதகர்.பன்னீர்செல்வம் வீட்டின் காலிங் பெல்லை யாரோ அழுத்தினார்கள். கதவை திறந்தபோது, ஜாய்சின் தந்தை பாலன் மற்றும் சர்ச் செயலாளர் டேவிட் நின்றுகொண்டு இருந்தார்கள்.
பன்னீர்செல்வம் : வாங்க ! வாங்க ! என்ன இந்த நேரம்?
பாலன் : நல்ல விஷயம் தானுங்க ! நம்ம பாப்பாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்னி இருக்கோம் !
பன்னீர்செல்வம் : ரொம்ப சந்தோஷம், உள்ள வந்து பேசலாமே !
அனைவரும் உள்ளே அமர்ந்து பேசத்தொடங்கினார்கள்...
பாலன் : மாப்பிள்ள ஒரு வாரத்துல அமெரிக்கா போறாரு, அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும் !
பன்னீர்செல்வம் : என்னய்யா இப்டி சொல்றீங்க? 3 அறிக்கை வாசிக்கனுமே ! சரி மாப்பிள்ள எந்த சர்ச்?
டேவிட் : அது வந்துங்கையா, அவரு கிறிஸ்டியன் இல்ல, ஆனா கல்யாணத்துக்காக மாறிக்கிறேன்னு சொல்றாரு, நீங்க தான் பாத்து ஏதாவது செய்யனும்
பன்னீர்செல்வம் : என்ன நெனச்சிகிட்டு நீங்க இப்டி பேசுறீங்க? குறைந்தபட்சம் 6 மாசம் தொடர்ந்து சர்சுக்கு வந்திருக்கனும், ஞானஸ்நானம் வாங்கி இருக்கனும், கல்யாணத்துக்கு முன்னாடி 3 வாரமாவது மேரேஜ் கவுன்சிலிங்ல பங்கெடுக்கனும், இல்ல சார் இதெல்லாம் நடக்காது
டேவிட் : நீங்க சொல்றது புரியுதுயா, 6 மாசம் சந்தா சர்சுக்கு குடுத்திடுறொம், உங்களுக்கும் தேவையானத பாத்து செஞ்சிடுறோம், நீங்க தான் இத எப்டியாவது செய்யணும்
பன்னீர்செல்வம் : நீங்க நெனக்கிற மாதிரி ஆளு நான் இல்ல, இந்த மாதிரி காரியத்துக்கு எல்லாம் நீங்க வேற ஆள பாருங்க !
பாலன் : ஐயா...
பன்னீர்செல்வம் : இல்லையா...நீங்க கிளம்புங்க !
பாலன், டேவிட் இருவரும் வெளியே வந்தனர்.
“தானும் பிழைக்கமாட்டேன், மத்தவனையும் பிழைக்க விட மாட்டேன்னு இந்த ஆளு ரொம்ப தான் அலுத்துக்கிறாரு ! மாப்பிள்ள வெளிநாட்ல வேல பாக்குறாரு, மாசம் 2 லட்சம் ரூபா சம்பாதிக்கிறாரு, இந்த மாதிரி வரன் கெடைக்குமாய்யா, நீ வேற யாராவது நல்ல பாஸ்டரா பாரு, வேற சர்ச்ல நாம கல்யாணத்த நடத்துவோம்” என்று சீறினார் பாலன்
அவர்களுடைய திட்டப்படியே வேறு ஒரு போதகர் இவர்களுடைய கோரிக்கைக்கு இணங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்து அடுத்த நாள் காலை 7 மணி. யாரோ வீட்டு கதவை தட்டினார்கள். மாப்பிள்ளை வெளியே சென்று கதவை திறந்தார். முன்னே முறுக்கு மீசையுடன் இன்ஸ்பெக்டர் துரை நின்றுகொண்டு இருந்தார்,
“இப்ப எந்த பேரு சொல்லி டா கல்யாணம் பண்ணியிருக்க !” என்று மிரட்டினார்
ஜாய்ஸ் வேகமாக வந்து, “என் புருஷன் என்ன பண்ணாரு? அவரை ஏன் இழுத்துகிட்டு போறீங்க?”
இன்ஸ்பெக்டர் துரை “இவன் உனக்கு மட்டுமா புருஷன்? வெளிய நிக்குது பாரு அந்த பொண்ணுக்கும் தான் புருஷன், இன்னும் நெறய பேருக்கு புருஷன், போம்மா வேலைய பாத்துகிட்டு” என்று கூறி அவனை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றார்.

ஒரு வாரத்திற்கு பிறகு...
போதகர் பன்னீர்செல்வத்திடம் சபையின் செக்ஸ்டன், ”ஐயா 2 மாசத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் மாப்பிள்ளையும் கவுன்சிலிங்கு வந்திருக்காங்க” என்றார்.
போதகர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, “வணக்கம் ! ஜெபம் பண்ணி ஆரம்பிச்சிருலாமா ?! ஜான் நீயே பிரேயர் பண்ணுப்பா !”
ஜான் : , நானா? இல்ல நீயே பண்ணு (சங்கீதாவிடம் கையை நீட்டினான்)
சங்கீதா : அச்சச்சோ, எனக்கு தெரியாது, நீங்களே பண்ணுங்க !
ஜான் : ஐயா ! நீங்களே பிரேயர் பண்ணி தொடங்கி வையுங்க, ஒரு 15 நிமிஷத்தில முடிச்சிருங்க, வேற ஒரு முக்கியமான வேல இருக்கு...

வரைபடம் & கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

புது வீடு

சபையில் சாட்சி நேரம் வந்தது. மைக் முன்னே வந்து தன்னுடைய சாட்சியை கூறினார்.
“நாங்க இவ்ளோ நாள் வாடக வீட்ல இருந்தோம், வீட்டு வாடகைய உரிமையாளர் ஏத்திட்டாரு, நாங்க வாடகைக்கு வீடு தேடப்போன இடத்தில எல்லாம் கிறிஸ்தவர்கள் சத்தமா ஜெபம் பண்ணுவாங்கன்னு யாருமே வீடு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனா கர்த்தரோட் கிருபையால ஒரு சொந்த வீடே குறைந்த விலைக்கு கிடைச்சுது” என்றார்
சபையார் அனைவரும் “அல்லேலூயா !” என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
அடுத்த நாள் மைக் தன் மனைவி தேவியுடன் தன்னுடைய ”இயேசு இல்லம்” என்னும் தன் புது வீட்டிற்கு சென்றார். அன்றிரவு இருவரும் உறங்கிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று மாடியில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. மைக் மற்றும் தேவி விளக்கை எடுத்துக்கொண்டு மாடி அறைக்குச் சென்றார்கள். ஆனால் மாடியில் யாரும் இல்லை. பூனை வருவதற்கும் வாய்பில்லாதவாறு வீடு பூட்டி இருந்தது. ஒன்றும் புரியாமல் இறங்கி வந்துவிட்டார்கள்.
அடுத்த நாள் இரவு இருவரும் உறங்கிக்கொண்டு இருந்தபோது, மைக் மீது ஒரு பூனை ஏறியது. அது மைக்கின் முகத்துக்கு அருகே வந்து, “டேய் வந்துட்டியா டா, ஒன்னைய நான் உயிரோட விட மாட்டேன் !” என்று சட்டையை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றது. அது தன் முன் காலை உயர்த்தி மைக் முகத்தை அடிக்கச் சென்றபோது, மைக்குக்கு தூக்கம் தெளிந்தது. நடந்தது கனவு என்பதை மைக் புரிந்துகொண்டார்.
அடுத்த நாள் மளிகை கடைக்கு சென்ற தேவி, தன்னுடைய வீட்டு முகவரியை சொல்லி, மளிகை சாமான்களை கொண்டுவரும்படி கூறினார். கடைக்காரரின் முகத்தில் உருவான அதிர்ச்சி, தேவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. “அம்மா, நீங்க அங்கயா தங்கி இருக்கீங்க?” என்றார் கடைக்காரர். தேவி பயத்தோடு, “ஆமாம், ஏன் கேக்குறீங்க?” என்றார். “இந்த வீட்ல பேய் சுத்துதும்மா, இந்த வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த எல்லாருமே ஏதோ ஒரு துர் சம்பவம் ஏற்பட்டதுக்கு அப்றம் தான் இந்த வீட்ட விட்டு போயிருக்காங்க!” என்றார்.
பயத்தோடு வீடு திரும்பிய தேவி, மைக் அலுவலகத்தில் இருந்து திரும்பியதும், வீட்டை பற்றி கூறினார். “அதெல்லாம் சும்மா!” என்று கூறியபோது, வீட்டின் மேல் புறத்தில் ஏதோ பாறாங்கல் விழுந்ததுபோல ஒரு சத்தம் கேட்டது. ஆனால் வழக்கம் போல மேலே எதுவும் இல்லை.
இதை தன் சபை பாஸ்டரிடம் சென்று மைக் தெரிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் சபையார் மைக்கின் வீட்டில் உண்ணா நோன்பிருந்து ஜெபம் செய்தனர்.
அருகில் இருந்த மளிகைக்கடைக்காரர் இதை எல்லா கவனித்துக்கொண்டு இருந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு, தேவியின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டன, அவர் கர்ப்பமாக இருந்தார்
ஒரு வருடத்திற்கு பிறகு, மைக்கின் மகளுக்கு பெயர் வைக்கும் விழா நடந்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு, வீட்டிற்கு முன்பு செடி வளர்ப்பது எப்படி என்று மைக் தன் மகள் ஏஞ்சலுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது குழி நோண்டும்போது, சில தகடுகள் தென்பட்டன. ஏஞ்சல் மைக்கிடம் “என்னப்பா இது?!” என்று கேட்டாள், மைக்கின் முகத்தில் புன்னகை பூத்தது...

கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

நடைபயிற்சி

பழனிச்சாமி வழக்கம் போல மாலை நேர நடைபயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார். செயின்ட். சூசை பள்ளியை நெருங்கிக்கொண்டு இருந்தபோது, யாரோ அவருடைய தோள் மீது கை போட்டார்கள்.
பீட்டர் : ஹேய் பழனிச்சாமி, நீயும் வாக்கிங் போறியா
பழனிச்சாமி : ஆமாம் பா, அந்த நேரு மைதானத்திற்கு போனவுடனே ஜாகிங் பண்ண வேண்டியது தான் !
பீட்டர் : ஜாங்கிங்கா ?! அதெல்லாம் நம்மலால முடியாது, நமக்கு வாக்கிங் தான், மைதானம் வரைக்கும் நான் கூட வரேன்
பழனிச்சாமி : ஆமாம் பா, யாருமே மைதானம் வரைக்கும் தான் வரமுடியும், அதுக்கு மேல யாரும் வரமுடியாது..
பீட்டர் : ஹா ஹா ஹா ! சரியா சொன்ன போ !
சிறிது நேரம் அமைதியாக நடந்தார்கள், திடீரென்று பீட்டருக்கு ஒரு சந்தேகம் !
பீட்டர் : ஏன் பா பழனிச்சாமி? சர்சுக்கெல்லாம் போறியே, அந்த இயேசுவால எல்லாரையும் குணப்படுத்த முடியுமா?
பழனிச்சாமி : நிச்சயமா முடியுமே ! கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்திட்டு நீயே இப்டி கேக்கிறியே
பீட்டர் : அப்டீன்னா அங்க பாரு (மைதானத்தில் இருந்து வெளியே வருகிறவர்களை நோக்கி கையை காட்டுகிறான் பீட்டர்) ! அவரு போறப்பயும் கையில குச்சிய ஊனிகிட்டு போனாரு, இந்த சுகமளிக்கும் பெருவிழா முடிஞ்சி வெளிய வரும்போதும் குச்சிய ஊனிகிட்டே வர்றாரு ! ஏன்?
பழனிச்சாமி : தெரியல பா ! ஆனா ஒன்னும் உறுதி உடம்பு குணம் அடையறதுக்காக மட்டும் இல்ல, மனசு குணம் அடையறதுக்காகவும் தான் எல்லாரும் இயேசுகிட்ட வர்றாங்க, நான் இந்த கிறிஸ்தவர்கள எவ்வளவு எதிர்த்து இருக்கேன்னு தெரியும்ல ! அவர் மேல நம்பிக்க வெச்சிருக்கவுங்க செத்ததுக்கு அப்றமா எல்லாரும் குணம் அடைஞ்சிருவாங்கன்னு சொன்னா நம்ப மாட்ட, சரி விடு
அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, ரோட்டில் போட்டி போட்டுக்கொண்டு வந்த லாரி ஒன்று, திசை மாறி பழனிச்சாமி அருகே வந்து, அவரை லேசாக மோதிவிட்டு சென்றது, பழத்த காயத்துடன் அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பீட்டர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.
இதுவரை ஒருபோதும் ஜெபம் செய்யாது இருந்த பீட்டர் முதல் முறையாக பழனிச்சாமியின் கடவுளிடம் வேண்டினான். சர்ச்சில் இருந்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் யாராவது ஒருவர் வந்து ஜெபித்தனர்.
அப்போது டாக்டர் வந்தார்..
“மன்னிக்கனும், இனிமே பழனிச்சாமிய எங்களால காப்பாத முடியாது ! மூளை செயலிழந்துடுச்சி, சுவாசக்கருவிய எடுத்ததும் உயிர் போயிடும், எப்ப எடுக்கனும்னு நீங்க தான் சொல்லனும் என்றார் !”
மனைவியும், உறவினர்களும் மாரை அடித்துகொண்டு அழுதனர், ஆனால் பீட்டர் மனம்தளராமல் ஜெபித்தார். அடுத்த நாள் சுவாசக்கருவியை அகற்றச் சென்றபோது, திடீரென்று பழனிச்சாமி கண்விழித்து எழுந்தார்..
டாக்டர்களுக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை, “இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கில் !” என்றனர்
பழனிச்சாமியுடன் அன்று மகிழ்ச்சியாக பேசிவிட்டு வீட்டுக்கு சென்றார் பீட்டர்.
முதல் முறையாக இயேசுவிடம் அழுது ஜெபித்துவிட்டு, தன் கட்டை காலை கழற்றி வைத்துவிட்டு உறங்கச் சென்றார் பீட்டர்.

கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

கிரகப்பிரவேசம்

முத்துப்பாண்டி பேருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தார், அப்போது அந்த வழியாக வந்த பார்த்தசாரதி தன்னுடைய காரை நிறுத்தினார்..
முத்துப்பாண்டி : “அடடே, கும்புட போன தெய்வமே குறுக்க வந்த மாதிரி இருக்கு, உங்கள தான் நான் பாக்க வந்துகிட்டே இருக்கேன் !”
பார்த்தசாரதி : “அச்சச்சோ, தெய்வம்னு எல்லாம் சொல்லாதீங்க, காருக்கு உள்ள வாங்க !”
முத்துப்பாண்டி : “இந்த ஊர்லயே உங்க அப்பா தான் பெரிய ஜோதிடர், எங்க வீட்ல ரொம்ப நாளா ஒரே பிரச்சனையா இருக்கு, எல்லாருக்கும் அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போயிடுது, அதான் என்ன பிரச்சனை, ஏதாவது தோஷம் இருக்குதான்னு பாக்கலாம்னு வந்தேன் !”
பார்த்தசாரதி : ”ஓ, அப்டியா, நாங்...”
முத்துப்பாண்டி : அடடே அங்க பாருங்க நம்ம முருகன், பைபிலும் கையுமா சுத்திகிட்டு இருக்கிறான்...
பார்த்தசாரதி : இயேசு கிறிஸ்துவ ஏத்துகிட்டான் போல இருக்கு...
முத்துப்பாண்டி : அட நீங்க வேற சார், யாரோ ஒரு பாஸ்ட்ர் தான் இவன மூளை சலவை செஞ்சிருக்காரு
பார்த்தசாரதி : அப்டியா சொல்றீங்க !
முத்துப்பாண்டி : அதுமட்டும் இல்ல, லாபம் இல்லாமலா இவன் எல்லாம் கிறிஸ்தவனா மாறுறான்? கிறிஸ்தவனா மாறிட்டான்னா, இவன மேல்ஜாதிக்காரன்னு இந்த சமுதாயம் மதிக்கும் அது
பார்த்தசாரதி : அவரு பையன் ஏதோ கவர்மெண்ட் வேலைக்கு போறதா இருந்துச்சே?
முத்துப்பாண்டி : இவன் சரியான முட்டாள் சார், கிறிஸ்தவனா மாறுனதால, இவன் பையனுக்கு ஜாதி கோட்டால கெடைக்க இருந்த வேல கெடைக்காம போயிருச்சி...
பார்த்தசாரதி : நீங்க சொல்றத பாத்தா, இவருக்கு லாபம் எதுவும் இருக்கிறத போல தெரியலையே, நஷ்டமாதான தெரியுது...
முத்துபாண்டி : என்ன சார் பண்றது, படிக்காதவன் கிட்ட எடுத்து சொல்லலாம், இந்த மாதிரி படிச்சி பட்டம் வாங்கினவன எல்லாம் என்ன பண்றது?
பார்த்தசாரதி : ஒன்னும் பண்ண முடியாது? யார் வேணும்னாலும் எந்த மதத்த வேணும்னாலும் பின்பற்றலாம்னு இந்திய அரசியல்சட்ட உரிமை இருக்கு...
முத்துப்பாண்டி : மேல்ஜாதி அந்தஸ்து கெடைக்குதுன்னு, இப்டி பண்றானுங்க !
பார்த்தசாரதி : அப்டியா சொல்றீங்க, இவர் குடும்பம் எல்லாம் பட்டணத்தில தான இருக்காங்க, கிராமத்தில தான் தீண்டாமை எல்லாம் இருக்கு, பட்டணத்தில இருக்கிற இவரு ஏன் இயேசுவ ஏத்துக்கிட்டாரு
முத்துப்பாண்டி : அது என்னமோ வாஸ்தவம் தான், இவன் எல்லாம் எங்க கிராமம் பக்கம் வரணும், கொட்டாங்குச்சியில தான் டீ குடுப்போம், இனிமே இவனுக்கும் கிளாஸ்ல டீ கெடைக்கும், மேல்ஜாதியாகிட்டானே
பார்த்தசாரதி : அது சரின்னு நெனக்கிறீங்களா? மனுஷன மனுஷன் அடிமைப்படுத்துறது சரியா? ம்ம்ம்ம், வீடு வந்துடிச்சி

இருவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றார்கள்...
முத்துப்பாண்டி வீட்டிற்குள் மேலும் கீழும் பார்த்தார், ”என்ன சார், வீட்ல அழகழகா இருந்த சிலை, படம் எதையுமே காணோம்” என்றார்.
“பிரம்மோ சமாஜ், ஆரிய சமாஜ் இதெல்லாம் படிச்சது இல்லயா, ராஜா ராம் மோஹன் ராய் மாதிரி இந்து சமய சீர்திருத்தவாதிகள் கடவுள் உருவமற்றவர்னும், அவருக்கு சிலைகள் கூடாதுன்னும் சொல்லி இருக்கிறாங்க, வேதங்களும் இத தான் சொல்லுது !” என்றார் பார்த்தசாரதி.
“பெரியவா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும், சரி அது இருக்கட்டும், நம்ம வேலைய பாப்போம், என் வீட்ட பத்தி சொன்னேனே” என்றார் முத்துப்பாண்டி
ஒரு வேண்டுதல் பண்ணிடுவோம், இங்கயே இருங்க, அப்பாவையும், பங்கஜத்தையும் கூட்டிகிட்டு வர்றேன்..
பார்த்தசாரதியின் அப்பா, மனைவி, பார்த்தசாரதி மற்றும் முத்துப்பாண்டி ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, ஏதோ ஒரு மென்மையான படலை பாடி, பார்த்தசாரதி இறைமன்றாட்டு செய்தார், அவர் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுவதை பார்த்த முத்துப்பாண்டிக்கு ஒன்றும் புரியவில்லை...
பார்த்தசாரதி : “என்ன முத்துப்பாண்டி, ஆச்சரியமா இருக்குதா? ஒரு நாள் என் நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போனப்ப இந்த மாதிரி தான் அவங்க குடும்ப ஜெபம் பண்ணினாங்க, தனக்காக மட்டும் வேண்டிக்காம, பக்கத்துவீட்டுக்காரங்க, இந்திய மக்களுக்காக, ஏன் எதிரிங்களுக்காக எல்லாம் அவங்க ஜெபம் பண்ணினாங்க, எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்திச்சி, நானும் அந்த இயேசு கிறிஸ்துகிட்ட ஜெபம் பண்ண ஆரம்பிச்சேன் !”
பார்த்தசாரதியின் அப்பா : “என் அனுபவத்தில ஜோதிடனா இருந்த நான், எத்தனையோ பேருக்கு வசியம் பண்ணி இருக்கேன், செய்வினை வெச்சி இருக்கேன், ஆனா இந்த இயேசுவ இவன் வேண்ட ஆரம்பிச்சதில இருந்து என்னால யாருக்கும் கெடுதல் செய்ய முடியல, ஆரம்பத்தில நாங்க எல்லாருமே இவன எதிர்த்தோம், ஆனா நம்ம வேதத்திலயும் இதே இயேசுவ பத்தி சில இடங்கள்ல குறிப்பிட்டு இருக்கிறத நான் பார்த்தேன்”
பங்கஜம் : நான் ஆரம்பத்தில இவர விட்டு போயிடலாம்னு தான் நெனச்சேன், ஆனா இவர் இயேசுவோட அன்ப தன் சொந்த வாழ்க்கையிலயும் காட்டினார், அவர விட்டு என்னால போகவே முடியல நானும் மாறிட்டேன்...
பார்த்தசாரதி : நான் மேல்ஜாதி அந்தஸ்து அடையறதுக்காக இயேசுவ ஏத்துக்க வேண்டிய அவசியம் இல்ல, எனக்கு போதுமான பணம் சொத்து, எல்லாமே இருக்குது, இது எல்லாதுக்கும் மேல அந்த முருகன் தன் பையன் சீரியசா இருந்தப்ப என் கிட்ட் வந்தாரு, நான் தான் அவருக்காக ஜெபம் பண்ணினேன், , ஆனா அவர் இயேசுவை ஏற்றுகிட்டது இன்னக்கி தான் எனக்கே தெரியிது...
முத்துப்பாண்டியின் தோள்மீது கையை வைத்து, உங்களையும் மூளை சலவை செய்யுறதா தான் நீங்க நெனப்பீங்க, அதனால இயேசுவ ஏத்துக்கோங்கன்னு உங்க கிட்ட நான் சொல்ல மாட்டேன், உண்மையா தேடுறவங்களுக்கு, கடவுள் தான் யாருங்கிறத வெளிப்படுத்திக்கிட்டு தான் இருக்காரு, அதனால, நீங்க தொடர்ந்து கடவுள் கிட்ட மன்றாடுங்க, உங்க வீடும் நல்லா இருக்கும், உண்மை என்னங்கிறத, அவரே உங்களுக்கு வெளிப்படுத்துவாரு
கதை : ஜெயசீலன் சாமுவேல்